by Vignesh Perumal on | 2025-03-12 01:19 PM
ஆன்மீக தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற புனித ஸ்தலங்கள் தென்னிந்தியாவில் அமைந்துள்ளது அவ்வகையில் திருச்செந்தூர் முருகப் பெருமான் உலக அளவில் புகழ் பெற்றுள்ளார். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
மேலும், முருக பெருமானின் ஆறுபடைகளில் இரண்டாவது படையாக இருக்கும், திருச்செந்தூரில் மாசி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சிறப்பித்தனர்.
மேலும், கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில் முக்கிய நிகழ்வாக 7-ம் நாளில் சுவாமி சண்முகர் தங்கச் சப்ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதனைத்தொடர்ந்து, 8-ம் நாளில் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் ராஜநடை திறக்கப்பட்டு, 4.30 மணியளவில் விசுவரூப தீபாரானையும், 5 மணியளவில் உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றுள்ளன. பின்னர், மிகவும் பிரசித்தி பெற்ற மாசித்திருவிழா தேரோட்டம் தொடங்கியுள்ளது.
முதல் நிகழ்ச்சியாக விநாயக பெருமான் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் வந்தனர். இந்த தேரானது ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது. அதைத்தொடர்ந்து ,சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது. மேலும், கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.