by Vignesh perumal on | 2025-03-12 09:13 AM
தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த சில தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வகையில், சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றைய தினம் முதலே கனமழை வெளுத்து வாங்கியது.
இருப்பினும், தமிழ்நாட்டில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.