by admin on | 2025-02-21 06:37 PM
மதுரை எய்ம்ஸ் முதல்கட்ட பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும், ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மருத்துவக்கல்லூரி நிரந்தரமாக இடமாற்றம் செய்யப்படும் என செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் 2019 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு மே 22, 2024ல் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. முதற்கட்டமாக கல்வி வளாகம், வெளிநோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ / மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய சேவை கட்டிடங்கள் போன்றவை கட்டப்படுகின்றன. முதற்கட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடியும், முதற்கட்ட கட்டுமானத்தில் 24% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முழு கட்டுமானமும் பிப்ரவரி 2027க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் செயல் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணிச்சேர்க்கையும் படிப்படியாக நடந்து வருவதாகவும், ஆசிரியர் பற்றாக்குறையின்மையையும் மற்றும் கல்வித்தரத்தையும் உறுதி செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்திலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிரந்தர வளாகத்திற்கு மாற்ற முயற்சிகள் நடந்து. வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிருபர் தங்க சுரேஷ் வாடிப்பட்டி மதுரை