by Vignesh Perumal on | 2025-07-01 11:01 AM
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜூலை 1) பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை செவிலியர்களின் நீண்டகால கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள சுமார் 3500-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மக்கள்தொகைக்கு ஏற்ப புதிதாக ஆரம்பிக்கப்படும் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் காலியாக உள்ள துணை சுகாதார நிலையங்களிலும் கிராம சுகாதார செவிலியர்களை நியமிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
துணை செவிலியர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து துணை சுகாதார நிலையங்களுக்கு பணியிடை மாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், கூடுதல் துணை சுகாதார நிலையங்களுக்கு பொறுப்பு பணியை செய்ய கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். எவ்வித திட்டமிடலும் இல்லாமல் திடீரென நடைமுறையில் இருந்த பிக்மி 2.0 இணையதள சேவையை பிக்மி 3.0 ஆக மாற்றியதால் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் தாமதங்களை சரி செய்ய வேண்டும். கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்வது, மகப்பேறு நிதி உதவித் திட்டம் போன்ற முக்கிய பணிகளில் ஏற்படும் சுணக்கங்களைத் தவிர்க்க வேண்டும். பிக்மி 3.0 பதிவு செய்வதை முழுமையாக சீரமைக்கும் வரை, அதன் பதிவை நிறுத்த வேண்டும்.
பிக்மி திட்டத்திற்காக கணினி பணிகளை மேற்கொள்ள தரவு உள்ளீட்டு பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதன் மூலம், கிராம சுகாதார செவிலியர்கள் தாய் சேய் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்த முடியும்.
நேரடி ஆய்வு மற்றும் காணொளி ஆய்வு நடத்தும் போது, பெண் அதிகாரிகளிலிருந்து செவிலியர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும். எந்த ஒரு புள்ளிவிவரங்கள் கேட்டாலும், அதற்கான போதுமான அவகாசம் வழங்க வேண்டும்.
துணை சுகாதார மையங்களில் தடுப்பூசி பணியில் அனுபவமற்ற ஒப்பந்த செவிலியர்களை ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும். 40 ஆண்டுகால அனுபவமிக்க கிராம சுகாதார செவிலியர்களை மட்டுமே தடுப்பூசி பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்வதை கைவிட வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரோணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஜோஸ்பின் அமலா, பொருளாளர் போதும் பொண்ணு, துணை தலைவர்கள் சிலம்பாயி, மனோரஞ்சிதம் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் நிர்மலா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், இரண்டாம் கட்டமாக மாநில அளவிலான போராட்டம் சென்னையில் நடத்தப்படும் என்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !