by Vignesh Perumal on | 2025-06-27 02:38 PM
கிராமப்புற சுகாதார செவிலியர்களின் பணிகளைப் பறித்து, அவர்களைப் பணிச்சுமைக்கு ஆளாக்கும் அரசின் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், 4000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தனியார்மயமாக்குவதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தின. இதில், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பல கட்டப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்தன.
ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட முக்கியக் கோரிக்கைகளில் கூறியதாவது: "நோய்த் தடுப்பு மற்றும் குடும்ப நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய துணை சுகாதார நிலையங்களை, ஒன்றிய அரசு சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களாக (Health and Wellness Centres) மாற்றி, தனியார் மூலம் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கும் மையங்களாக மாற்றுகிறது. தடுப்பூசிகள் வழங்கும் பணியையும் தனியார்மயமாக்கி வருகிறது. தமிழ்நாடு அரசும் இந்தத் தனியார்மயமாக்கல் போக்கைப் பின்பற்றுகிறது. இதன் காரணமாக, கிராமப்புற சுகாதார செவிலியர்களின் முக்கியமான பணியாக வரையறுக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் பணி அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, இடைநிலை சுகாதார வழங்கல் பணியாளர்களிடம் (Mid Level Health Provider) வழங்கப்படுகிறது. இது கிராமப்புற செவிலியர்களின் பணிப் பறிப்பு மட்டுமல்லாமல், தடுப்பூசிகளை இலவசமாக உரிய நேரத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பெறும் உரிமைகளுக்கும் எதிரானது. ஏழை எளிய மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போய்விடும். தமிழ்நாடு அரசு இந்நடவடிக்கையைக் கைவிட்டு, கிராமப்புற சுகாதார செவிலியர்கள் மூலம் தடுப்பூசிகளை வழங்குவதைத் தொடர வேண்டும். 8488 துணை சுகாதார நிலையங்களில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதாவது, பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஏற்கனவே பணியில் உள்ள கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்குப் பணிச்சுமை கடுமையாக அதிகரித்துள்ளது. ஒரு VHN (Village Health Nurse) ஒரு கிராமத்தின் பணியைப் புரிவதற்குப் பதிலாக, நான்கு கிராமங்களின் பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இச்சேவை குறைபாட்டால் தாய்மார்களும், குழந்தைகளும் பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
MRB (Medical Services Recruitment Board) மூலம் VHN/ANM (Auxiliary Nurse Midwife) பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மாநில அரசே முன்னின்று தலையிட்டு, சுமூகமான தீர்வு கண்டு, 4000க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்களின் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
தடுப்பூசி வழங்கும் பணியைத் தனியார் மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கும் போக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்கிறது. இது ஏழை - எளிய மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசிகள் கிட்டாத நிலையை உருவாக்கும்.
இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதாரத் துறையின் மூலம் தொடர்ந்து தடுப்பூசிகளை இலவசமாக வழங்கிட வேண்டும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் ஏற்கெனவே சமூக நலத்துறையிடம் இருந்தது. அது பொது சுகாதாரத் துறைக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் செயல்படுத்தும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
முத்துலட்சுமி ரெட்டி திட்டப் பணிக்காகச் சுகாதார செவிலியர்கள் தங்கள் பணி நேரத்தில் 80 விழுக்காடு நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. இதனால், கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கான முதன்மைப் பணிகளான தாய் - சேய் நலப்பணிகள் மற்றும் தடுப்பூசி வழங்கும் பணிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. இதனால், மகப்பேறு மரணம், சிசு மரணம் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
பல நூறு கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன.
இந்தப் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் பொருட்டும், இத்திட்டத்தை மீண்டும் சமூக நலத்துறையிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பல கட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகச் சங்கங்கள் அறிவித்துள்ளது.
ஜூன் 23, 2025 முதல் ஜூலை 2, 2025 வரை கோரிக்கை அட்டைகள் அணிந்து பணிக்குச் செல்லும் போராட்டம். ஜூலை 10, 2025 அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். ஜூலை 24, 2025 சென்னையில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் நிறுவனர் இராம. இந்திரா, தலைவர் இ.விஷாலாட்சி, பொதுச்செயலாளர் பு.சத்தியா, பொருளாளர் பி.பாத்திமா மேரி, தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைகள் குறித்து அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாகும்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!