by Vignesh Perumal on | 2025-06-13 03:49 PM
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுத்தது எதன் அடிப்படையில் என்றும், விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மே 16 மற்றும் 17 தேதிகளில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் தேனாம்பேட்டை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் சோதனை நடத்தினர். இதேபோல, தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சீல் வைக்கப்பட்ட இடங்களை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், டாஸ்மாக் முறைகேட்டுக்கும் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்றும் வாதிட்டார். அவரது 2 செல்போன் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விக்ரம் ரவீந்திரன் தரப்பிலும் இதேபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நீதிபதிகள் எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அமலாக்கத்துறைக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் எதன் அடிப்படையில் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது? விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது? வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்தால், போலீசார் உதவியுடன் கதவை உடைத்து சோதனை நடத்தி இருக்கலாமே? அமலாக்கத்துறை சட்டத்தை பின்பற்ற வேண்டும்.
அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் பதிலளிக்கையில், "சோதனை நடத்த சென்றபோது வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்ததாகவும், அதன் காரணமாகவே சீல் வைக்கப்பட்டதாக" தெரிவித்தார்.
அமலாக்கத்துறை மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA) மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (FEMA) ஆகிய சட்டங்களின் விதிகளை செயல்படுத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பணமோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட சொத்துக்களை கண்டறியவும், பறிமுதல் செய்யவும், குற்றவாளிகளை கைது செய்யவும், விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.
இருப்பினும், ஒரு குற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அமலாக்கத்துறையால் மேற்கொண்டு விசாரணை செய்ய முடியும் என்றும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் மாநிலத்தின் பிராந்திய எல்லைக்குள் அமலாக்கத்துறையின் அதிகாரத்தை மீற முடியாது என்றும் சில சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என தமிழக அரசும் உயர்நீதிமன்றத்தில் முன்பு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் பயங்கரம்...! பெரும் பரபரப்பு...!