by Vignesh Perumal on | 2025-06-12 11:15 AM
தமிழகத்தில் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டினர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்டந்தோறும் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு சிறப்புப் படையை நியமிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர்களைக் கண்டறிந்து அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தது. குறிப்பாக, வங்கதேசத்தைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைக் கண்டறிந்து நாடு கடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த வழிகாட்டுதலின்படி, தமிழக அரசும் தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டினர்களைக் கண்டறிய, மாவட்டந்தோறும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் படையை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்புப் படைகள், சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து, அவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபடும். பின்னர், 'வெளிநாட்டினர் சட்டம்' மற்றும் 'கடவுச்சீட்டு சட்டம்' ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
ஏற்கனவே குஜராத், திரிபுரா, அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமானவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறிய நிலையில் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கையானது தேசியப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, தமிழ்நாட்டில் பாதுகாப்புச் சூழலை மேலும் மேம்படுத்தும் என்றும், சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்புப் படைகள் எப்போது செயல்படத் தொடங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் பயங்கரம்...! பெரும் பரபரப்பு...!