by Vignesh Perumal on | 2025-06-07 11:58 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார். நாளை (ஜூன் 8, 2025) நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 7) இரவு 8:30 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அவரது வருகையை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் தீவிர சோதனை, மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்புப் பணியாளர்களுடன் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாளை (ஜூன் 8) காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று அமித்ஷா தரிசனம் செய்யவுள்ளார்.
மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்திற்குப் பிறகு, பிற்பகல் 3 மணியளவில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். இந்த கூட்டத்திற்கான பூமி பூஜை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகள் என சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை வலுப்படுத்துவது, பூத் கமிட்டி அளவிலான பணிகளைத் துரிதப்படுத்துவது, மற்றும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காண்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அமித்ஷா நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆளும் திமுக அரசுக்கு எதிராக 2026 தேர்தலில் வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் ஒற்றுமையை வளர்ப்பது மற்றும் தலைமைக்கு ஆதரவளிப்பது குறித்தும் அமித்ஷா வலியுறுத்துவார்.
சமீபத்தில் மதுரை மாவட்டத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அதே மதுரையில் அமித்ஷாவின் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்ற பாஜகவின் மேலிடத் தலைவர்களின் குறிக்கோளை இது பிரதிபலிக்கிறது. அமித்ஷாவின் வருகை, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று பாஜக தலைவர்கள் நம்புகின்றனர். அமித்ஷா, ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு சவாலை முன்வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை என்றும், ஆனால் விரைவில் அது நடக்கும் என்றும் அமித்ஷாவின் வருகைக்கு முன்னதாகத் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் வருகை, கூட்டணி வியூகங்கள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் கூட்டம் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!