by Vignesh Perumal on | 2025-06-06 11:26 AM
நடிகர் விஜய் மற்றும் அவர் கல்வி விருது விழாவில் பங்கேற்ற மாணவர்கள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நடிகர் விஜய் மாணவர்களுக்குக் கல்வி விருது வழங்கிய நிகழ்வு குறித்துப் பேசும்போது, "இரண்டு கிராம் பரிசு கொடுத்ததும், நாம் முட்டாள் பசங்க" என்றும், "ஒரு வயது பெண்ணைக் கூட்டிக் கொண்டு போகிறான்" என்றும் கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், மாணவர்கள் விஜயை கட்டிப்பிடித்து அன்பு வெளிப்படுத்தியதை கொச்சைப்படுத்தும் விதமாக விமர்சித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
விஜய் தனது இளம் ரசிகர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதும், சிலர் அவரை அன்புடன் அணைத்ததும், சிலர் ரோஜா பூ கொடுத்ததும் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. இந்த நெகிழ்ச்சியான தருணங்களை வேல்முருகன் விமர்சித்தது, விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேல்முருகனின் இந்தப் பேச்சு, நடிகர் விஜய் ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தாடி பாலாஜி போன்ற விஜய் ஆதரவாளர்கள் வேல்முருகனின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வேல்முருகன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தாடி பாலாஜி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்தே, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்துக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் வேல்முருகனுக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனும் வேல்முருகனின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "பெண் பிள்ளைகளை இதுபோலப் பேசுவது தமிழ்ப் பண்பாடு இல்லை. விஜய்யை அன்போடு அண்ணா என்று அழைப்பதில் என்ன ஆபாசம் வந்துவிட்டது?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்ச்சை குறித்து வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தான் பேசியதை முழுவதுமாகக் கேட்காமல் சிலர் தன்னை விமர்சிப்பதாகக் கூறினார். "நடிகர் விஜய், தனது இளமைக்காலம் முழுவதும் சினிமாவில் நடித்துவிட்டு, பொருள் ஈட்டிவிட்டு தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் வந்த உடனேயே செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குத்தான் செல்வேன் என்கிறார். ஏன் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு செல்ல மாட்டீர்களா என்ற அரசியல் விமர்சனங்களை முன்வைத்தேன். அதேபோல, நடிகருக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டுமெனப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, குறிப்பாகப் பெண் பிள்ளைகளுக்குக் கூறவேண்டுமென வலியுறுத்தினேன். காமராஜரை, ஒரு வருடத்திற்கு முன்பு வந்தவரோடு ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல என்று கூறினேன். நடிகரின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதைத் தவிர்த்துவிட்டுப் பெற்றோருக்குச் சேவை செய்யுங்கள் என வலியுறுத்தினேன்" என்றார்.
மேலும், "சுமார் 1 மணி 40 நிமிடங்கள் நான் பேசியதை முழுவதுமாக கேட்காத சில அரைவேக்காடுகள், எங்கள் தளபதியை பற்றி பேசியுள்ளாய்? மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் சொல்லாத ஒன்றை சொல்லியதாகக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். இது சரியல்ல. நான் பேசியதில் விஜய்க்கு ஏதும் ஆட்சேபனை இருந்தால், என்னைப்போலப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கேள்வி கேட்கட்டும். அதை விட்டுவிட்டு மற்றவர்களை வைத்து வீடியோ போடுவது, பேச வைப்பது வளர்ந்துவரும் விஜய்க்கு அழகல்ல. இதை உடனே விஜய் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றும் வேல்முருகன் கூறினார்.
இந்தச் சம்பவம், தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் பயங்கரம்...! பெரும் பரபரப்பு...!