| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

விலை வீழ்ச்சி..! அரசுக்கு பாமக. அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..!

by Vignesh Perumal on | 2025-06-04 12:55 PM

Share:


விலை வீழ்ச்சி..! அரசுக்கு பாமக. அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..!

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள உழவர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் துயர் துடைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். உழவர்களின் நலன் காக்க மாம்பழத்திற்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழகத்தில் மிக அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது. 'சேலத்து மாம்பழம்' என்று போற்றப்படும் பல வகைகள் இங்குதான் அதிகமாக விளைகின்றன.

நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருந்ததால், வழக்கத்தை விட சற்று கூடுதல் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த உழவர்களுக்கு, மாம்பழத்தின் விலை வீழ்ச்சி பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக ரூ.22 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இம்முறை ஒரு டன் மாம்பழத்தின் சராசரி விலை ரூ.4,000 ஆகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பல இடங்களில் இந்த விலைக்குக்கூட கொள்முதல் செய்வதற்கு வணிகர்களோ, மாம்பழக்கூழ் ஆலைகளோ முன்வரவில்லை. ஒரு டன் மாம்பழத்தை ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்தால் உழவர்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது; மாறாக, ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக இழப்பு ஏற்படும் என்று அன்புமணி இராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இழப்பை உழவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாம்பழ விலை வீழ்ச்சியால் உழவர்கள் மட்டுமின்றி, மாமரங்களை குத்தகைக்கு எடுத்து அறுவடை செய்து சந்தையில் விற்பனை செய்யும் குத்தகைதாரர்களும், சிறு வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கடுமையான வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பை சந்தித்த நிலையில், நடப்பாண்டில் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு இந்த விலை வீழ்ச்சி பேரிடியாக அமைந்துள்ளது.

மாம்பழங்களின் விலை வீழ்ச்சிக்கு உற்பத்தி அதிகரிப்பு மட்டுமின்றி, மேலும் பல காரணங்களும் கூறப்படுகின்றன. மாம்பழம் கொள்முதல் செய்யும் மொத்த வணிகர்கள் தங்களுக்குள் ரகசியக் கூட்டணி அமைத்து கொள்முதல் விலையைக் குறைத்துள்ளனர். இது தவிர, சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பதால் அவை மாம்பழங்களை கொள்முதல் செய்ய மறுப்பது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் புதிதாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகியவையும் சிக்கலுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

இந்தச் சிக்கல்களைச் சரி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆனால், மாம்பழங்களின் விலை வீழ்ச்சியை சமாளிக்க இரு அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், கொள்முதல் செய்யவும் தனித்தனி அமைப்புகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நடப்பாண்டில் எந்தப் பயிரும் விளைச்சலுக்குக் குறைவில்லை என்றும், அரசின் தவறான கொள்கைகளும், வழிகாட்டுதல்களும் தான் உழவர்களைப் பெரும் இழப்புக்கு ஆளாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தர்பூசணி பழங்களில் சிவப்பு சாயம் செலுத்தப்படுகிறது என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி பரப்பிய 'அரைகுறையான விழிப்புணர்வு செய்தியால்' தர்பூசணி பழங்களின் விற்பனை சரிந்து உழவர்கள் கடனாளி ஆனதை அவர் உதாரணமாகக் காட்டியுள்ளார்.

தமிழக அரசு உடனடியாக மாம்பழ உழவர்கள், வணிகர்கள் மற்றும் மாம்பழக்கூழ் ஆலைகளின் உரிமையாளர்களை அழைத்துப்பேசி மாம்பழங்களுக்கு கட்டுப்படியாகும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மாம்பழங்கள் மற்றும் மாம்பழக்கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் இனியும் இந்த நிலைமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், உழவர்களின் நலனைக் காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.




நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment