| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

செம்மொழி நாள்..! முதலமைச்சர் புகழாரம்..!

by Vignesh Perumal on | 2025-06-03 10:58 AM

Share:


செம்மொழி நாள்..! முதலமைச்சர் புகழாரம்..!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தந்தையும், திமுக தலைவருமான கலைஞருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், "தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்! ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம், அவரது 102-வது பிறந்தநாளை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தின் மையப்பகுதியில் மலர்களால் கலைஞர் கருணாநிதியின் உருவப் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், "செம்மொழி நாள்" என்ற வாசகத்துடன் கூடிய பேனர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியை, தமிழ்நாடு அரசு சார்பில் "செம்மொழி நாள்" விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று காலை 10.15 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், "கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள்" வழங்கப்பட்டது. மேலும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய நூல்களையும் முதலமைச்சர் வெளியிடவுள்ளார். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணை மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்க்கு பரிசுகளும் இந்த விழாவில் வழங்கப்பட உள்ளன.

கலைஞர் கருணாநிதி, தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததில் முக்கியப் பங்காற்றியவர். அத்துடன், அவரது தமிழ்ப் பணி, எழுத்தாற்றல், சமூக நீதிச் சிந்தனைகள், ஆட்சிப் பணிகள் என அனைத்துத் துறைகளிலும் தமிழகத்திற்கு அரும்பணியாற்றியவர். அவரது பிறந்தநாள், தமிழின் பெருமையையும், கலைஞரின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் "செம்மொழி நாள்" ஆகக் கொண்டாடப்படுவது தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழார்வலர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.



நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment