by Vignesh Perumal on | 2025-06-02 10:03 AM
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜூன் 2, 2025) தண்டனை விவரங்களை அறிவிக்கவுள்ளது. இந்த வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு மிகவும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி இரவு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் சக மாணவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஞானசேகரன் (37) இருவரையும் மிரட்டி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் ஞானசேகரனை டிசம்பர் 24 ஆம் தேதி கைது செய்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை தினந்தோறும் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 சாட்சிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மே 28 ஆம் தேதி, வழக்கை விசாரித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட 12 சட்டப் பிரிவுகளில் 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதன்மூலம் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும், ஞானசேகரன் தனது தந்தை இறந்துவிட்டதாகவும், தாயை பராமரிக்க வேண்டும் என்றும், தனக்கு 8 ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
ஆனால், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி. மேரி ஜெயந்தி, ஞானசேகரன் கொடிய குற்றச்செயலை செய்துள்ளதாகவும், பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான குற்றம் செய்திருப்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், கருணை காட்டக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் இன்று (ஜூன் 2, 2025) அறிவிக்கப்படும் என நீதிபதி எம். ராஜலட்சுமி கடந்த மே 28 ஆம் தேதி தெரிவித்தார். அதன்படி, இன்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
12 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்...! இளைஞர் அதிரடி கைது...! பதறிப்போன பெற்றோர்....!
புதிய கூட்டணிக்கு வியூகம் - தமிழக அரசியலில் பரபரப்பு ! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !!
தமிழகத்தில் பதவியேற்பு...! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு...!
தமிழகத்தில் பதவியேற்பு...! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு...!
யார் யாருக்கு சீட்? அதிரடி காட்டும் எடப்பாடி ! கலக்கத்தில் கட்சியினர் !!