by Vignesh Perumal on | 2025-06-02 09:41 AM
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள லந்தகோட்டையைச் சேர்ந்த கண்ணுச்சாமி (51) என்ற விவசாயியின் ஆட்டுக்கிடையில் புகுந்த தெரு நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலியாகின. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணுச்சாமி நீண்டகாலமாகவே செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், அவரது ஆட்டுக்கிடையில் திடீரென புகுந்த தெரு நாய்கள் ஆடுகளைக் கடுமையாகத் தாக்கின. இதில் 6 பெரிய ஆடுகளும், 4 ஆட்டுக்குட்டிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் 3 ஆடுகள் படுகாயமடைந்தன.
இந்தச் சம்பவம் குறித்து கண்ணுச்சாமி உடனடியாக கால்நடைத்துறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கால்நடை உதவி டாக்டர் பாபு தலைமையிலான மருத்துவக் குழுவினர், காயமடைந்த ஆடுகளுக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர்.
திடீரென ஏற்பட்ட இந்த இழப்பால் விவசாயி கண்ணுச்சாமி மிகுந்த கவலையடைந்துள்ளார். ஆடுகள் வளர்ப்பை நம்பி வாழ்ந்து வரும் இவருக்கு, ஒரே நேரத்தில் 10 ஆடுகள் பலியானது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.