| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

பாமக தலைவருக்கு எதிராக, அன்புமணி ராமதாஸ் மீண்டும் நியமனம்..!

by Vignesh Perumal on | 2025-05-31 05:37 PM

Share:


பாமக தலைவருக்கு எதிராக, அன்புமணி ராமதாஸ் மீண்டும் நியமனம்..!

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நீடித்து வரும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் உட்பட சில மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் மாற்றம் செய்து அறிவித்த நிலையில், அன்புமணி ராமதாஸ் அவர்களை மீண்டும் நியமித்துள்ளார். இது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, கட்சியில் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டவும், அன்புமணிக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்களை மாற்றவும் முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் உள்ளிட்ட சுமார் 16 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 4 மாவட்ட தலைவர்களை நீக்கி, புதிய பொறுப்பாளர்களை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பொருளாளர் திலகபாமாவையும் நீக்கிவிட்டு, சையத் மன்சூர் உசேன் என்பவரை புதிய பொருளாளராக நியமித்தார். ராமதாஸின் இந்த நடவடிக்கைகள், அன்புமணி ஆதரவாளர்களை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை நியமிக்கும் நோக்கம் கொண்டவை என கூறப்படுகிறது.

ராமதாஸின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, அன்புமணி ராமதாஸ் உடனடியாக செயல்பட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் மூன்று நாட்களுக்கு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இதில் 23 மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 22 பேர் அன்புமணி கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், ராமதாஸால் நீக்கப்பட்ட மாநில பொருளாளர் திலகபாமாவுக்கு மீண்டும் அதே பதவியை வழங்கி, மற்றவர்களும் நீடிப்பார்கள் என அறிவித்துள்ளார். மேலும், "பாமக பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமாவே அப்பொறுப்பில் தொடர்வார். அவரை நீக்க எனக்கோ, வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கே அதிகாரம். இதுதான் கட்சியின் சட்ட விதி. இந்த விதிகள் தேர்தல் கமிஷனில் உள்ளது. அதேபோல் மாவட்ட செயலாளர்களையும் யாராலும் மாற்ற முடியாது. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவர்தான் மாற்ற முடியும். என்னுடைய கடிதம்தான் செல்லும்" என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் இந்த மோதல், பாமகவில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பும் தங்களுக்குத்தான் கட்சியின் சட்டப்படியான அதிகாரம் உள்ளது என வாதிட்டு வருவதால், பாமகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அன்புமணி தனது பனையூர் அலுவலக முகவரியை கட்சி அலுவலக முகவரியாக மாற்றியுள்ளதும், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களில் தனது முகவரியை அச்சிட்டிருப்பதும் இந்த மோதலின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.

பாமகவில் நடந்து வரும் இந்த அதிகாரப் போர், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. 




நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment