by Vignesh Perumal on | 2025-05-29 04:23 PM
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் வெளிப்படையாக வெடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நாளை (மே 30) முதல் சென்னையில் உள்ள தனது பனையூர் அலுவலகத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக, ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடுகள் தலைதூக்கி வருகின்றன. குறிப்பாக, முகுந்தன் பரசுராமன் இளைஞரணி தலைவர் நியமனம், கூட்டணி முடிவுகள், மற்றும் சமீபத்தில் ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்காக முன்வைத்த பகிரங்கக் குற்றச்சாட்டுகள் ஆகியவை பாமகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. "வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்ந்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன்" என்று ராமதாஸ் வேதனைப்பட்டதும், முகுந்தன் தனது இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததும் இக்கட்சியில் ஒரு நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளைச் சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த டிசம்பர் 2024 இல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், முகுந்தன் நியமனத்தை ராமதாஸ் அறிவித்தபோது, அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே தனது எதிர்ப்பைத் தெரிவித்து, "பனையூரில் அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளேன். அங்கு வந்து தொண்டர்கள் என்னை சந்திக்கலாம்" என்று கூறி தனது தொடர்பு எண்ணையும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அப்போதிருந்தே அன்புமணி தனது பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளைத் தனித்தனியாக சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
நாளை முதல் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்புகளில், கட்சியின் தற்போதைய நிலவரம், உட்கட்சிப் பூசல்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்து அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில் நிர்வாகிகளைச் சந்தித்து வரும் நிலையில், அன்புமணி தனது பற்போர் ஆதரவாளர்களைத் திரட்டி தனது பலத்தை நிரூபிக்கும் முயற்சியாக இந்தச் சந்திப்புகள் பார்க்கப்படுகின்றன.
பாமகவில் நிலவி வரும் இந்த தந்தை-மகன் இடையேயான மோதல், கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த சந்திப்புகள் தீர்மானிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!