by Vignesh Perumal on | 2025-05-29 12:39 PM
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பூலூர் மேல்மலைப் பகுதி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளது. அப்பகுதி மக்கள், நிரந்தர மின் விநியோகத்திற்கு மின்கோபுரங்கள் அமைத்து மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளிக் காற்றினால், மேல்மலைப் பகுதியில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் அப்பகுதி முழுவதும் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால், பூலூர் கிராமத்தைச் சேர்ந்த கே.எம். பரமேஸ்வரன் உள்ளிட்ட பொதுமக்கள், தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய மனுவில் கூறியிருப்பதாவது: "திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பூலூர் கிராமத்தைச் சேர்ந்த கே.எம். பரமேஸ்வரன் ஆகிய நான், தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்பும் செய்தி இது. நான் உங்களுக்கு அனுப்பியுள்ள காணொளி, கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் உண்டான சேதங்களைக் காட்டுகிறது. கடந்த ஒரு வாரமாக எங்கள் பகுதி மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளது. பல மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து, மின் கம்பிகள் அறுந்து கிடக்கின்றன. மின் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் கடந்த ஒரு வாரமாக மின் விநியோகத்தைச் சீரமைக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தாங்கள் பொறுப்பேற்ற பிறகு, எங்களுக்கு உண்மையிலேயே ஒரு தைரியம் பிறந்துள்ளது. தங்களால் எங்கள் பகுதிக்கு வெளிச்சம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். எதிர்காலத்தில் எந்தவொரு சூழ்நிலையிலும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டுமெனில், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிக்கு மின்கோபுரங்கள் அமைத்து அதன் வழியாக மின்சாரம் வழங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஆகவே, தாங்கள் மனது வைத்து, எங்களை இந்த இருளில் இருந்து மீட்டெடுக்க ஆவன செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்மலைப் பகுதிக்கு மின் விநியோகம் என்பது பருவநிலை மாற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வாக, மின்கோபுரங்கள் அமைத்து அதன் வழியாக மின்சாரம் வழங்கினால் மட்டுமே தடையில்லா மின்சாரம் சாத்தியமாகும் என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், மலைப்பகுதிகளில் மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு சிறப்பு நிதி ஒதுக்கி, விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர், இந்த விவகாரத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்தி, மக்களின் துயரத்தைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!
பழனியில் பயங்கரம்....! வீட்டில் புகுந்து பெண்களை மிரட்டிய...! 2 பெண்கள் உட்பட 7 பேர் அதிரடி கைது...!
ஜீவனாம்ச வழக்கு - கணவன் கேட்ட ஒரே கேள்வி ! ஷாக்கான நீதிபதி !!
12 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்...! இளைஞர் அதிரடி கைது...! பதறிப்போன பெற்றோர்....!