| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

நகைக்கடன் விதிமுறைகள்..! சு.வெங்கடேசன் நிதியமைச்சரிடம் மனு..!

by Vignesh Perumal on | 2025-05-27 06:13 PM

Share:


நகைக்கடன் விதிமுறைகள்..! சு.வெங்கடேசன் நிதியமைச்சரிடம் மனு..!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய நகைக்கடன் விதிமுறைகள், ஏழை எளிய மக்கள், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கப் பெண்கள் மற்றும் விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்த விதிமுறைகளில் உள்ள கடும் நிபந்தனைகளை நீக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவசர செலவுகளுக்காக அனைத்து வழிகளும் அடைபடும்போது, சாதாரண கடன்தாரர்களுக்கு நகைக்கடன் ஒரு கடைசி புகலிடமாக அமைகிறது. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) இது ஒரு லாபம் ஈட்டும் துறை என்பதால், இதன் நிபந்தனைகள் கடனாளிகளுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள், தங்கக் கடன் வாங்குபவர்கள் மீது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வழிகாட்டல்களின் தலைப்பு "கருத்துகள் பெறுவதற்கான நகல்" என்று இருந்தாலும், விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு முரண்பாடு என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே உள்ள 80% கடன்-மதிப்பு விகிதம் (Loan-to-Value) 75% ஆகக் குறைக்கப்பட்டிருப்பது, கடன் அளவைக் குறைத்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். கடன் காலம் ஒரு வருடமாக உள்ள நிலையில், இந்த விகிதத்தை 85% ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் 11-வது பிரிவு, கடன்தாரரின் திரும்பச் செலுத்தும் திறனை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், நகைக்கடன் 100% பாதுகாக்கப்பட்ட கடன் என்பதால், தினக்கூலிகள் மற்றும் நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கு வருமானச் சான்று காண்பிப்பது இயலாது. இந்த நிபந்தனை, பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதைத் தடுத்து, கடன்தாரர்களை கந்துவட்டிக்காரர்களை நோக்கித் தள்ளும் என்பதால், இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

12-வது பிரிவு, வருமான ஈட்டல் கடன்களுக்கும், குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேலான நுகர்வோர் கடன்களுக்கும் இறுதிப் பயன்பாட்டு ஆவணச் சான்று கட்டாயம் எனக் கூறுகிறது. இது விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் கடன் தொகையை நேரடியாகப் பெற முடியாத சூழலை உருவாக்கும். கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் தொகையை நேரடியாக விற்பனையாளர்களுக்குச் செலுத்தும் நிலை ஏற்படும் என்பதால், இந்த நிபந்தனையையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பிரிவு 13, புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கடன்களுக்கு புதிய கடன் தகுதி பரிசீலனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கிறது. இதனால், கடன் வழங்கும் நிறுவனங்கள் புதிய நகை மதிப்பீடு மற்றும் செயல்முறை கட்டணங்களை வசூலிக்கக்கூடும். இது கடன்தாரர்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தும் என்பதால், கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரிவு 16, பிணையாக வைக்கப்படும் நகைகளை வாங்கியதற்கான மூல ரசீதுகளைக் கோருகிறது. பல தலைமுறைகளாக உள்ள நகைகளுக்கு ரசீதுகள் இருக்க வாய்ப்பில்லை என்பதால், இது எளிய மக்களுக்குக் கடன் கிடைப்பதைத் தடுக்கும். மூல ரசீதுகள் இல்லாத பட்சத்தில், மாற்று ஆவணங்கள் கோருவதும் சிக்கலானது என்பதால், இந்த நிபந்தனையையும் நீக்கி, தற்போதுள்ள சுய உறுதிமொழி முறையைத் தொடர வேண்டும் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பிரிவு 21, வங்கிகளால் விற்கப்பட்ட தங்க நாணயங்கள் மட்டுமே பிணையாக வைக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. இந்த நிபந்தனையையும் நீக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

பிரிவு 25 (iii), கடன் கால முடிவில் செலுத்தப்படும் மொத்த தொகையைக் கணக்கிட்டு கடன்-நகை மதிப்பு விகிதத்தை நிர்ணயிப்பது, கடன்தாரரை கடுமையாகப் பாதிக்கும். துவக்கத்திலேயே எதிர்கால வட்டியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால், கடன்-நகை மதிப்பு குறைந்துவிடும் என்பதால், இந்த நிபந்தனையையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


பிரிவு 49, முழு கடன் திரும்பச் செலுத்தப்பட்ட ஏழு வேலை நாட்களுக்குள் தங்கத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுகிறது. இது அபாயகரமான பிரிவு என்றும், கடன் திரும்பச் செலுத்தப்பட்ட நாளன்றே உடனடியாக நகையைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புதிய விதிமுறைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் குறைந்த வேலை வாய்ப்புகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையில் மேலும் துயரங்களைக் கொண்டு வரும் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்மறை நிபந்தனைகளையும் திரும்பப் பெறாவிட்டால், அவர்கள் கந்துவட்டிக்காரர்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு நிதி வங்கிகளை நாடும் நிலை ஏற்படும் என்றும், இந்த நிறுவனங்கள் அதீத வட்டி விதிப்பதோடு ரிசர்வ் வங்கி விதிமுறைகளையும் கண்டுகொள்ளாதவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, அனைத்து எதிர்மறை நிபந்தனைகளையும் திரும்பப் பெறுமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்துமாறு நிதியமைச்சரை சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment