| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் முப்பெரும் விழா..! என்ன சிறப்பு தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-05-26 12:52 PM

Share:


இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் முப்பெரும் விழா..! என்ன சிறப்பு தெரியுமா...?

இந்திய அரசியல் சட்ட மாமேதையும், இந்திய தொழிலாளர்களின் விடிவெள்ளியுமான பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாள், அவரது பேரன் மற்றும் தேசியத் தலைவரான பாலாசாகிப் ஒய். பிரகாஷ் அம்பேத்கர் அவர்களின் 71வது பிறந்தநாள் (மே 10) மற்றும் உலகத் தொழிலாளர் தினமான மே தினம் ஆகிய முப்பெரும் விழாவை இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் இன்று (மே 25, 2025) தேனி அல்லிநகரம் வாசவி மஹாலில் வெகு சிறப்பாகக் கொண்டாடியது. இந்த நிகழ்வில் தொழிலாளர்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. பஞ்சமர் நிலங்கள் மீட்பு: தேனி மாவட்டத்தில் உள்ள பஞ்சமர் நிலங்களை முறையான கணக்கெடுப்பு நடத்தி, ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து, அவற்றை மீட்டு, இந்த நிலத்தின் உரிமையாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினருக்குப் பகிர்ந்தளிக்க மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

2. பணி நிரந்தரம் மற்றும் சமூக நீதி: திமுக அரசு, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளான துப்புரவுப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய அடிப்படைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் நிரந்தரப் பணியாளராக மாற்றுவோம் என்பதை மறந்துவிட்டு, அனைத்துத் துறைகளையும் தனியாருக்குத் தாரை வார்த்து தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பை பறித்துள்ளதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளான பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியத் திட்டம், சமூக நீதியை நிலைநாட்டும் இட ஒதுக்கீடு ஆகியவற்றை முறையாக நிறைவேற்றக் கோரப்பட்டது.

3. ஒப்பந்தத் தொழிலாளர் பாதுகாப்பு: தேனி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து, ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவுட்சோர்சிங் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி, பணியிடத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதுடன், அனைவருக்கும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ உதவிகள் அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

4. பதவி உயர்வு இட ஒதுக்கீடு: எஸ்சி, எஸ்டி அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு இட ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் இயற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

5. சிறப்பு உட்கூறு நிதி: மத்திய-மாநில அரசுகளால் எஸ்சி, எஸ்டி மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு திட்ட நிதியை மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்து வழங்கக் கோரப்பட்டது. மேலும், இந்த நிதியை மலம் அள்ளுதல் மற்றும் சாக்கடைகளை அகற்றுதல் போன்ற அடிமை வேலைகளுக்கு மட்டுமே ஒதுக்குவதைத் தவிர்த்துவிட்டு, புதிய சிறப்புத் திட்டங்களை உருவாக்கி இம்மக்களின் மேம்பாட்டிற்கான நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.


6. வன் கொடுமை தடுப்புச் சட்டம்: தேனி மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களைச் சாதிய வன்மத்துடனும், பழிவாங்கும் நோக்கத்துடனும் பாகுபாடு காட்டும் அலுவலர்கள் மீதும், கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பணியிடங்களில் சட்ட விதிகளுக்குப் புறம்பாக நிர்வாகத்தில் தலையிடும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீதும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

7. ஒப்பந்த நிறுவன முறைகேடுகள்: தேனி மாவட்டத்தில் துப்புரவுப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வரும் ஓவர் லேண்ட் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட், கிரீன் டிரஸ்ட் நிறுவனம், ராமன் & கோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தூய்மைப் பணியாளர்களின் வருவாயைச் சுரண்டுவதோடு, அரசு பொது சுகாதாரத்தைப் பாதுகாத்திட வழங்கும் தொகையை முறையாகச் செயல்படுத்தாமல் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு மஸ்டர் ரோல் ஊழல் போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஊழலுக்குத் துணைபோகும் செயல் எனக் கண்டிக்கப்பட்டது. மேற்படி முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும், இந்நிறுவனங்களின் ஊழலுக்குத் துணையாகச் செயல்படும் அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

8. ஒப்பந்தப் பணிகளில் எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோருக்குப் பங்கீடு: தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை மூலமாகவும், தாட்கோ உள்ளிட்ட அரசுத் துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள், சாலை அமைத்தல், ஏரிகளைத் தூர்வாருதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களிலும் எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோருக்கு உரிய பங்கீட்டை முன்னுரிமையின் அடிப்படையில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

9. தாட்கோ மூலம் தனி வங்கி: தமிழக அரசின் தாட்கோ மூலம் எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோருக்கான கடன் உதவி வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் போதிய அக்கறை செலுத்தாமல், கடன் உதவி மனுக்களைத் தள்ளுபடி செய்வதால் தொழில் தொடங்க வாய்ப்பற்ற இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. எனவே, தாட்கோவே ஒரு தனி வங்கியை உருவாக்கி தொழில் கடன் உதவியை நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

10. குறவர் சமூகத்தினருக்குச் சாதி சான்று: தமிழகத்தின் பழங்குடி இனங்களில் ஒன்றான குறவர் சமூக மக்களை சுதந்திரத்திற்குப் பின் பல்வேறு காரணங்களைக்காட்டி 27 வகையாகப் பிரித்து மலைக்குறவன் (ST), குறவர் (DNC), குறவன் (SC) என மூன்று பிரிவுகளில் சாதி சான்று வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இத்தகைய நடைமுறையால் இம் மக்களை அடையாளப்படுத்துவதில் ஏற்படும் குளறுபடிகள் மற்றும் அரசு அலுவலர்களின் மெத்தனப்போக்கினால், இவர்களுக்குச் சாதி சான்று வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.


இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஜக்கா பார்த்தசாரதி தலைமையிலான ஆய்வு குழுவின் பரிந்துரைகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ளதால், இச்சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய வகையில் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கான உரிய சாதி சான்று வழங்கி, இந்த மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் எனச் சமூக நீதி அரசை இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் கேட்டுக்கொண்டது.

இந்த முப்பெரும் விழா, அம்பேத்கரின் சமூக நீதிச் சிந்தனைகளையும், தொழிலாளர்களின் உரிமைகளையும் வலியுறுத்தும் ஒரு முக்கிய களமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment