| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

அதிநவீன மிதவை நடைபாதையுடன் படகு குளம்..! பிரமாண்ட திட்டம்..!

by Vignesh Perumal on | 2025-05-25 04:25 PM

Share:


அதிநவீன மிதவை நடைபாதையுடன் படகு குளம்..! பிரமாண்ட திட்டம்..!

மதுரை நகரின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான வண்டியூர் கண்மாய், கொடைக்கானல் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள படகு குழாம்களைப் போலவே அதிநவீன தொழில்நுட்பத்தில் மிதவை நடைபாதையுடன் கூடிய பிரமாண்ட படகு குளமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் இந்த பிரம்மாண்ட திட்டம், வண்டியூர் கண்மாயைப் புதுப்பொலிவுடன் ஒரு முக்கிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 550 ஏக்கர் பரப்பளவிலான வண்டியூர் கண்மாய்ப் பூங்காவை மேம்படுத்தும் பணிகள், மதுரை மாநகராட்சியின் சார்பில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தற்போது 70% நிறைவடைந்துள்ளதாகவும், வரும் ஜூலை மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, முதன்முறையாக வண்டியூர் கண்மாயில் அமைக்கப்பட்டு வரும் 'பிலோட்டிங் செட்டி' (Floating Jetty) எனப்படும் 500 சதுர மீட்டர் பரப்பளவிலான மிதவை நடைபாதை ஆகும். காற்று நிரப்பிய பைபர் குடுவைகளைக் கொண்ட இந்த நடைபாதை, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பாதுகாப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, கொடைக்கானல் மற்றும் கோவை போன்ற இடங்களில் உள்ள படகு குழாம்களில் உள்ளதைப் போன்ற ஒரு அனுபவத்தை மதுரை மக்களுக்கு வழங்கும்.

படகு குழாம் மற்றும் மிதவை நடைபாதை மட்டுமின்றி, வண்டியூர் கண்மாய் மேம்பாட்டுத் திட்டத்தில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன:

கண்மாயின் கரையோரத்தில் 3 கி.மீ. நீளத்திற்கு நடைபாதை மற்றும் மதுரையிலேயே முதன்முறையாக 3 கி.மீ. தூரத்திற்கு மிதிவண்டிப் பாதை (சைக்கிள் டிராக்) அமைக்கப்பட்டுள்ளது.

மன அமைதிக்காக தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்வதற்கான தனி வளாகங்கள். கலை நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளுக்கான திறந்தவெளி அரங்கம். சறுக்கு, ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரணங்கள். நவீன கழிப்பறைகள், நீரூற்றுகள், மின்விளக்குகள், பலவகை பூக்கள் மற்றும் மூலிகைகளின் ஆயிரக்கணக்கான செடிகள், மரங்கள் நடுதல். கண்மாயின் மையத்தில் ஒரு அழகிய சிறிய தீவு உருவாக்கப்பட்டு, அதற்கு மரப்பாலம் வழியாக பொதுமக்கள் நடந்து செல்லும் வசதியும், இளைப்பாற இருக்கைகளும் அமைக்கப்படுகின்றன.

இத்திட்டத்தில், கண்மாய் வரத்துக் கால்வாயில் 4 சிறு பாலங்கள் அமைக்கப்படுவதுடன், கண்மாய் நீரின் தரத்தை மேம்படுத்த 4 MLD திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படவுள்ளது. இது, கண்மாயின் நீர் ஆதாரத்தைப் பாதுகாப்பதோடு, நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துவதற்கு உதவும்.


இந்த பிரமாண்டமான திட்டம் நிறைவடைந்ததும், மதுரை மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு மையமாகவும், நீர்நிலை சுற்றுலாத் தலமாகவும் வண்டியூர் கண்மாய் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment