by Vignesh Perumal on | 2025-05-24 11:37 AM
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் உள்ள 9 முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது "உள்ளூர் புயல் எச்சரிக்கை" என்பதைக் குறிக்கிறது. அதாவது, துறைமுகத்தை விட்டு விலகி, புயல் உருவாகியுள்ளது என்றும், அது புயல் எச்சரிக்கை பகுதிக்குள் நுழையக் கூடும் என்றும் இது எச்சரிக்கிறது. மேலும், துறைமுகத்திலிருந்து தற்போதைக்கு கப்பல்கள் வெளியேறுவது பாதுகாப்பல்ல என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது "தொலைதூர புயல் எச்சரிக்கை" என்பதைக் குறிக்கிறது. அதாவது, தொலைவில் ஒரு புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகத்திற்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது என்றும் இது எச்சரிக்கிறது.
இந்த புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டதையடுத்து, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோரக் காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு, புயல் மற்றும் மழையின் தாக்கத்தை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!