by Vignesh Perumal on | 2025-05-17 01:22 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக 11 இடங்களிலும், மதிமுக 1 இடத்திலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. பேரூராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக பெரும்பான்மையுடன் இருந்ததால் அக்கட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைமை கழகமும் அவரது பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தலைவராக பொறுப்பேற்ற தமிழ்ச்செல்விக்கு ஆரம்பம் முதலே நெருக்கடிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திமுகவின் முன்னாள் பேரூராட்சி தலைவரான தமிழன் மற்றும் அவரது மனைவியும், தேனி மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் ஸ்டீபனின் தாயாருமான ஞானமணி ஆகியோர் துணைத் தலைவராக பதவி வகித்து வருகின்றனர்.
தலைவி தமிழ்ச்செல்வியின் புகாரின்படி, அவர் பொறுப்பேற்ற நாள் முதல் ஸ்டீபன் மற்றும் அவரது குடும்பத்தினர் பேரூராட்சியின் அனைத்து அதிகாரங்களிலும் தலையீடு செய்து வந்துள்ளனர். அரசு ஒப்பந்தங்கள் விடுவது, துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளையும் தலைவியுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளனர்.
மேலும், துணைத் தலைவரும் ஸ்டீபனின் தாயாருமான ஞானமணி மற்றும் ஸ்டீபன் ஆகியோர், "நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இல்லையென்றால் தலைவர் பதவியில் இருந்து உன்னை தூக்கி விடுவோம்" என்று தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தமிழ்ச்செல்வி குற்றம் சாட்டியுள்ளார்.
பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஸ்டீபனிடம் தமிழ்ச்செல்வி கேள்வி எழுப்பியதால், ஆத்திரமடைந்த ஸ்டீபன், மற்ற உறுப்பினர்களைத் தூண்டிவிட்டு தமிழ்ச்செல்வி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 14.05.2025 அன்று கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவி தமிழ்ச்செல்வி தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில், பேரூராட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத ஸ்டீபன் தனது அலுவலகத்தில் வந்து அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிப்பதாகவும், தனது அதிகாரத்தில் தலையிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் தாழ்த்தப்பட்ட பெண் தலைவராக இருப்பதால் ஸ்டீபன் தன்னை குறைத்து மதிப்பிடுவதாகவும், தனது சேர்மன் அறையை பயன்படுத்த விடாமல் இரட்டை சேர் முறையை ஏற்படுத்தி தனக்கு இடையூறு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஸ்டீபன் சாதி ரீதியாக தன்னை திட்டியதாக தமிழ்ச்செல்வி SC/ST ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் பெரியகுளம் DSP இருவரையும் அழைத்து எச்சரித்து எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பெற்றிருந்தும், ஸ்டீபன் தொடர்ந்து சாதிய பாகுபாடுடன் நடந்து கொள்வதாக தமிழ்ச்செல்வி தனது தற்போதைய புகாரில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, தேவதானப்பட்டி காவல் நிலைய போலீசார் தமிழ்ச்செல்வியின் புகாரை ஏற்று, இந்திய தண்டனைச் சட்டத்தின் 132 BNS பிரிவு மற்றும் SC/ST (POA) சட்டத்தின் 3(1)(m) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாழ்த்தப்பட்ட பெண் தலைவருக்கு நேர்ந்த இந்த கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் திமுக கட்சியைச் சேர்ந்த பிரமுகரே இவ்வாறு நடந்து கொள்வது சமூக நீதிக்கு கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!