by Vignesh Perumal on | 2025-05-14 06:39 PM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.05.2025) சேவுகம்பட்டி மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதலில், சேவுகம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் தென்னை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களில் ஊடுபயிராக பருத்தி மற்றும் உளுந்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட இராமகிருஷ்ணாபுரம் மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பெத்தானியாபுரம் ஆகிய பகுதிகளில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்தார். மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு நிலை, நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். மேலும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து கலந்துரையாடினார். மருத்துவமனையில் உள்ள குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதாரமான சூழல் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், குன்னுவராயன்கோட்டை மற்றும் கூட்டத்துஅய்யம்பாளையம் ஆகிய கிராமங்களை இணைக்கும் மஞ்சளாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.6.35 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர், நடகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.88.90 இலட்சம் மதிப்பீட்டில் தலா 2 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் மற்றும் ஆய்வுக்கூடம் கட்டப்பட்டு வருவதையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இறுதியாக, நடகோட்டை, சித்தர்கள்நத்தம் மற்றும் குல்லிசெட்டிபட்டி ஆகிய கிராமங்களை இணைக்கும் வைகை ஆற்றின் குறுக்கே எஸ்சிபிஏஆர் நிதியிலிருந்து ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலத்தின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (சுகாதார நலப் பணிகள்) மரு.பூமிநாதன், வேளாண்மை உதவி இயக்குநர் திரு.எஸ்.நாகேந்திரன், நிலக்கோட்டை வட்டாட்சியர் திருமதி விஜயலட்சுமி, வத்தலகுண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.குப்புசாமி, திரு.மணிமாறன் மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!