| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

80 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சம் நலத்திட்ட உதவிகள்...! அசத்தும் கலெக்டர்...!

by Vignesh Perumal on | 2025-05-14 05:55 PM

Share:


80 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சம் நலத்திட்ட உதவிகள்...! அசத்தும் கலெக்டர்...!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பளியன்குடி கிராமத்தில் இன்று (14.05.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 80 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சத்து ஆயிரத்து நூற்று முப்பத்தெட்டு (₹ 90,01,138) மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ. மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உரையாற்றுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்வதை மாற்றி, மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு கிராமமாகச் சென்று அனைத்துத் துறை அலுவலர்களும் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தீர்வுகாணும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் வனப்பகுதி சார்ந்த பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், வனத்துறையினர் இப்பகுதியை பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் பராமரிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பளியன்குடி மக்கள் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள லோயர்கேம்ப் நியாயவிலைக்கடையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி வந்த சிரமத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கையை ஏற்று மாதத்தில் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் பளியன்குடியிலேயே நடமாடும் நியாயவிலைக்கடை மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதி நூலகத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேசை மற்றும் நாற்காலி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சுகாதாரத்துறையின் சார்பில் இப்பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்துள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பின்னரே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நன்றாகப் படித்தால் மட்டுமே உயர் பதவியை அடைய முடியும் என்றும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு அனைத்து அடிப்படை வசதிகளையும், கல்வி உதவித்தொகைகளையும் வழங்கி வருவதாகவும், மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படுவதுடன், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதால், குழந்தைகளை தவறாமல் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மக்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பளியன்குடி பகுதியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டுவது மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதியளித்தார்.

இன்றைய முகாமில், வருவாய்த் துறையின் சார்பில் 44 நபர்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்களும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொடுநோயால் பாதிக்கப்பட்ட 3 நபர்களுக்கு தலா ரூ.12,000/- வீதம் உதவியும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தொழில் தொடங்க 1 சுயஉதவி குழுவிற்கு ரூ.9,60,000/- கடனுதவியும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 16 நபர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் மதிப்பிலான காப்பீடு அட்டைகளும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு தலா ரூ.500/- மதிப்பிலான மருத்துவப் பெட்டகங்களும் வழங்கப்பட்டன. மேலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 நபர்களுக்கு தலா ரூ.590/- மதிப்பிலான நெகிழிக் கூடை மற்றும் காய்கறி விதை தொகுப்புகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் சிறுதளை திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு தலா ரூ.516/- மதிப்பிலான உளுந்து விதைகளும், நகராட்சித்துறையின் சார்பில் 2 நபர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களும் என மொத்தம் 80 பயனாளிகளுக்கு ரூ.90,01,138/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, நடமாடும் நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். முன்னதாக, அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.


இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஐ. மகாலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி சாந்தி, இணை இயக்குநர் (வேளாண்மை) திருமதி சாந்தாமணி, மாவட்ட சுகாதார அலுவலர் திரு. ஜவஹர்லால், துணை இயக்குநர் (தோட்டக்கலை) திருமதி நிர்மலா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு. செய்யது முகம்மது, துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. மாணிக்கம், தாட்கோ மேலாளர் திருமதி சரளா, கூடலூர் நகராட்சி ஆணையாளர் திரு. கோபிநாத், வட்டாட்சியர் திரு. கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி கனி, திரு. ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment