by Vignesh Perumal on | 2025-05-14 03:25 PM
தமிழக அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல் மற்றும் இசை பாடங்களில் பணியாற்றும் 12 ஆயிரம் பேரை திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், இந்த முறையாவது மே மாத சம்பளம் வழங்க வேண்டும் என்றும் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது வழங்கப்படும் 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை மாற்றி காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என்றும், 14 ஆண்டு தற்காலிக வேலையை நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
உணவு, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கவனிப்பு, மருத்துவ செலவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு சுமையில் தவிக்கும் ஆசிரியர்கள் மீது முதல்வர் பரிவு காட்டி, இந்த முறையாவது மே மாதம் சம்பளம் வழங்கினால் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ காப்பீடு, போனஸ் உள்ளிட்ட அரசு சலுகைகள் இல்லாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். முதல்வர் மனது வைத்து தேர்தல் வாக்குறுதியை அரசாணையாக்கி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் தான் தங்களது எதிர்காலம் கிடைக்கும் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
பட்ஜெட்டின் போது பள்ளிக்கல்வி அமைச்சர் அளித்த வாக்குறுதியை பகுதிநேர ஆசிரியர்கள் பெரிதும் நம்பி இருப்பதாகவும், எனவே பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் முதல்வர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.