by Vignesh Perumal on | 2025-04-23 10:04 AM
திண்டுக்கல் நகரின் புகழ்பெற்ற அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கவுள்ளது.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து மே மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவிழா நாட்களில் தினந்தோறும் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரரும், அபிராமி அம்மனும் பல்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வருவார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வாக மே மாதம் 8 ஆம் தேதி அருள்மிகு அபிராமி அம்மனுக்கும், காளஹஸ்தீஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மே மாதம் 9 ஆம் தேதி சித்திரை திருவிழாவின் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.
சித்திரை திருவிழாவின் நிறைவு நாளான மே மாதம் 10 ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இதன் மூலம் இந்த ஆண்டுக்கான திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இனிதே நிறைவு பெறும்.
விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பக்தர்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்றும் கோயில் நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.