by Vignesh Perumal on | 2025-04-16 10:17 AM
சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் நேற்று (15.04.2025) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரம் அருகே தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள புதர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு பொட்டலம் கிடந்துள்ளது.
உடனடியாக இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது, உள்ளே ஒரு செல்போன் மற்றும் சுமார் 39 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாலையிலிருந்து சிறை வளாகத்திற்குள் கஞ்சா பொட்டலத்தை வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், சிறைக்குள் செல்போன் மற்றும் கஞ்சா எப்படி வந்தது, யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிறை வளாகத்தில் இதுபோன்ற சட்டவிரோத பொருட்கள் கண்டெடுக்கப்படுவது அவ்வப்போது நிகழ்வது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் புழல் சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.