by Vignesh Perumal on | 2025-04-16 09:08 AM
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இன்று முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இடத்திலும், ரோஜா பூங்கா அருகே அமைந்துள்ள அப்சர்வேட்டரி பகுதியிலும் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டன.
இந்த வாகன நிறுத்துமிடங்களை அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சோதனை அடிப்படையில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று (16.04.2025) முதல் இந்த தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நகராட்சி ஆணையர் சத்தியநாதன் இதுகுறித்து தெரிவிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை வெளியிட்டார். அதன்படி, பேருந்துகள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 100, வேன்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 50, கார்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 35 மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 15 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், பொது இடங்களில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறையினர் அபராதம் விதிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியாக இந்த கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அனைவரும் இந்த புதிய முறையை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கட்டண வசூல் மூலம் கிடைக்கும் வருவாய், வாகன நிறுத்துமிடங்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.