by Vignesh Perumal on | 2025-04-15 09:12 PM
கன்னிவாடியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதாக முழுமையான செய்தி கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள சந்தமநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக ரேவதி, செந்தில் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை இன்று (15.04.2025) நடைபெற்றது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ரேவதி மற்றும் செந்தில் ஆகிய இருவருக்கும் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற மூன்று பேர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கன்னிவாடி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.