by Vignesh Perumal on | 2025-04-15 08:31 PM
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே கடந்த மாதம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் பாண்டித்துரை மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சின்னாளப்பட்டி அருகே உள்ள கீழக்கோட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பாண்டித்துரை (வயது 42) என்பவர் கடந்த மாதம் அப்பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் பாண்டித்துரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பாண்டித்துரையின் தொடர் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பிரதீப் அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி, சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் பாண்டித்துராவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால், பாண்டித்துரை ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்படுவார். இந்த நடவடிக்கை அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது. சிறுமைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல்துறையினரின் எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.