by Vignesh Perumal on | 2025-04-15 03:35 PM
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், வழக்கு தொடர தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்கியுள்ளார்.
ராஜேந்திர பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், ராஜேந்திர பாலாஜி தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ராஜேந்திர பாலாஜி சுமார் 2.2 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கையின் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரையை ஆய்வு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
ஆளுநரின் அனுமதி கிடைத்ததை அடுத்து, ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரைவில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்க உள்ளனர்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜேந்திர பாலாஜி தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.