by Vignesh Perumal on | 2025-04-15 01:56 PM
அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக தயாரிப்பு நிறுவனம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இல்லையெனில், படத்தில் இருந்து அந்த பாடல்களை 7 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இளையராஜா தனது பாடல்களின் உரிமைகளை மீறுவது தொடர்பாக தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நோட்டீஸ் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.