by Vignesh Perumal on | 2025-04-15 09:29 AM
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று (ஏப்ரல் 14, 2025) அரசுப் பேருந்தின் டயர் கழன்று ஓடிய விவகாரத்தில், ராசிபுரம் கிளை மேலாளர் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்பக்க டயர் ஒன்று திடீரென கழன்று சாலையில் உருண்டோடியது. அதிர்ஷ்டவசமாக, பேருந்து ஓட்டுநர் சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை உடனடியாக நிறுத்தினார். இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் உத்தரவின் பேரில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பேருந்தின் பராமரிப்பில் குறைபாடு இருந்ததும், உரிய முறையில் ஆய்வு செய்யாததும் தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த விபத்திற்கு காரணமான ராசிபுரம் கிளை மேலாளர், வாகனப் பிரிவு மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட மொத்தம் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.