by Vignesh Perumal on | 2025-04-15 08:32 AM
அருள்மிகு காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில்
(குமரகோட்டம்) புராணப் பெயர் செனாதீச்வரம் என்று அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள முருகன் கோயில்களில் ஒன்றாகும். கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான். (கந்தபுராணம் அரங்கேறிய கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகமாக உள்ளது.) மேலும், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் பாடல் கொண்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இறைவர்: சுப்பிரமணியர்.
இறைவியார்: வள்ளி - தெய்வானை.
தொன்மை: 1000-2000 ஆண்டுகளுக்கு முன்.
வழிபட்டோர்: கச்சியப்ப சிவாசாரியார், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோர்.
திருவிழா: ஆண்டுதோறும் வைகாசி 11ம்நாள் பிரம்மோற்சவத்தில் வள்ளியுடன் சேர்ந்த சுப்பிரமணியருக்கும், ஐப்பசி கந்த சஷ்டியில் தேவசேனாவுடன் முருகனுக்கும் திருமணம் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழாவின் போது இந்தக் கோயிலை 108 முறை சுற்றி தங்கள் கோரிக்கைக்காக பக்தர்கள் வேண்டுவார்கள். வைகாசி விசாகப் பெருவிழாவும், திருக்கார்த்திகையும் இங்கு சிறப்பு. இது தவிர செவ்வாய், வெள்ளி, பரணி, கார்த்திகை, பூசம், சஷ்டி முதலியன இங்கு சிறப்பான நாட்களாகும்.
வேண்டுவன: நாக ஸ்கந்த வழிபாட்டிற்காக இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடை, நாக தோஷம் விலகும் என்பது தொன்மை (ஐதீகம்).
நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் நாக ஸ்கந்தருக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.