by Vignesh Perumal on | 2025-04-14 01:17 PM
மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த முறை, மும்பை போக்குவரத்து துறையின் வொர்லி பகுதியில் உள்ள அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6:30 மணியளவில் வந்த அந்த மிரட்டல் செய்தியில், சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கொலை செய்து, அவரது காரை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் மும்பை பந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த மிரட்டல் குறித்து வொர்லி காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை காவல்துறையினர் இந்த மிரட்டலை தீவிரமாக விசாரித்து, மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
1998 ஆம் ஆண்டு கருப்பு மான் வேட்டை வழக்கில் சல்மான் கான் பெயர் அடிபட்டதில் இருந்து, அவர் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற தாதாவின் கொலைப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீப காலமாக சல்மான் கானுக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சல்மான் கானின் பந்த்ரா இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.
நவம்பர் மாதம், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கர்நாடகாவின் ஹூப்ளியில் இருந்து மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தன்னை லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறி சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தார். உயிருடன் இருக்க வேண்டுமானால் ஒரு கோவிலில் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அந்த நபர் மிரட்டினார்.
தொடர்ச்சியான மிரட்டல்கள் காரணமாக சல்மான் கானுக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனது இல்லத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவர் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் மற்றும் அதிநவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.
இந்த புதிய மிரட்டலை மும்பை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. மிரட்டல் விடுத்த நபர் யார், இதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.