by Vignesh Perumal on | 2025-04-14 01:00 PM
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (ஏப்ரல் 14, 2025) டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
சென்னையில் உள்ள பல்லாவக்கத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
தனது கட்சியின் கொள்கைகளில் டாக்டர் அம்பேத்கர் முக்கிய வழிகாட்டியாக திகழ்கிறார் என்று விஜய் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிலும் அம்பேத்கர் குறித்து அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.
சமூக நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி வரும் விஜய், அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் மரியாதை செலுத்தியது அவரது அரசியல் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வின்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர். விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அங்கு திரண்டு தங்களது அபிமான தலைவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.