by Vignesh Perumal on | 2025-04-14 08:40 AM
திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி பகுதியில் வன உயிரின வேட்டையைத் தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் வன பாதுகாப்பு படை குழுவினரும், அய்யலூர் வனத்துறை ஊழியர்களும் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடியதாக டேவிட் அந்தோணி, கிறிஸ்டோபர் பிரபு மற்றும் அருள்ராஜ் ஆகிய மூன்று பேர் பிடிபட்டனர்.
வனத்துறையினர் நடத்திய விசாரணையில், இம்மூவரும் சட்டவிரோதமாக காட்டு முயலை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட டேவிட் அந்தோணி, கிறிஸ்டோபர் பிரபு மற்றும் அருள்ராஜ் ஆகிய மூவருக்கும் தலா இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வீதம், மொத்தம் எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டனர். அபராதத் தொகையை செலுத்திய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதிகளில் வன உயிரினங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். மேலும், வன உயிரின பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.