by Vignesh Perumal on | 2025-04-12 12:26 PM
மதுரையில் இன்று (ஏப்ரல் 12, 2025) நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர், "அதிமுக – பாஜகவின் தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான்" என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் பேசுகையில், "இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டனர். தங்களது சுயநலத்திற்காக அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டையே அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். ஆனால், தமிழக மக்கள் ஒருபோதும் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள்" என்று ஆவேசமாக தெரிவித்தார்.
நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டி குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்தார். "உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அளித்த பேட்டி அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியாக இல்லை. அவர் பேசிய வார்த்தைகள் ஆணவத்தின் உச்சத்தை காட்டுகிறது. தமிழக மக்கள் மீது அவருக்கு எந்தவித மரியாதையும் இல்லை என்பது அவரது பேச்சின் மூலம் தெளிவாகிறது" என்று ஸ்டாலின் கூறினார்.
மேலும், "திமுக ஒருபோதும் யாருக்கும் பயப்படாது. தமிழக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். வரும் தேர்தலில் மக்கள் அதிமுக – பாஜக கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்த கடுமையான விமர்சனங்கள் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திரளான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.