by Vignesh Perumal on | 2025-04-12 09:05 AM
மும்பை தாக்குதல் சதி வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹ்வூர் ராணாவை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ராணாவிடம், 2008 மும்பை தாக்குதல்களின் பின்னணி, பாகிஸ்தானின் தொடர்பு மற்றும் தாக்குதல்தாரிகள் மும்பைக்குள் ஊடுருவியது எப்படி என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் உள்ள தொடர்பு குறித்து ராணாவிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலுக்கான திட்டமிடல், பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கியது யார் என்பது குறித்து அதிகாரிகள் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
தாக்குதல்தாரிகள் கடல் மார்க்கமாக மும்பைக்குள் எப்படி ஊடுருவினார்கள், அவர்களுக்கு உள்ளூர் உதவியாளர்கள் யார் இருந்தார்கள் என்பது குறித்தும் ராணாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலுக்கான முழு சதித்திட்டத்தையும் வெளிக்கொணரும் நோக்கில் என்ஐஏ அதிகாரிகள் ராணாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். டேவிட் ஹெட்லி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராணாவுக்கு தெரிந்த கூடுதல் தகவல்களைப் பெறவும் முயற்சி செய்கின்றனர். தாக்குதலுக்காக ராணாவிடமிருந்து அல்லது அவர் மூலம் யாருக்கெல்லாம் நிதி உதவி கிடைத்தது, அந்தப் பணத்தின் மூலம் என்னென்ன ஆயுதங்கள் வாங்கப்பட்டன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பை தாக்குதல் பாணியில் தென்னிந்தியாவின் பிற நகரங்களிலும் தாக்குதல் நடத்த ராணா சதி செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணாவுக்கு நீதிமன்றம் 18 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். ராணாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மும்பை தாக்குதல் தொடர்பான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையின் முடிவில் மும்பை தாக்குதலின் முழு பின்னணியும் வெளிச்சத்துக்கு வரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.