by Vignesh Perumal on | 2025-04-12 07:19 AM
அருள்மிகு மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோயில்
அமைவிடம்: இக்கோயில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் என்ற ஊரின் தெற்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நம்பிக்கை: மெய்யன்பர்கள் பொருட்செல்வம் பெற்று மேன்மையுறவும், குழந்தைகள் தங்களது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், இளைஞர்கள் திருமணத்தடை நீங்கிடவும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆடிப்பெருக்கு நாளில் பக்தர்கள் மொட்டை அடித்து, தங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
கோயில் அமைப்பு: இந்த அம்மன் கோயில் விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. இத்திருக்கோவிலில் அருள்மிகு மகாலட்சுமி மூலவராக இரண்டு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். வைணவ சம்பிரதாயப்படி மகாலட்சுமி சிலை தாமரை மலர்மீது அமர்ந்து. நான்கு கரங்களில் கதை, தாமரை, சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருவது மரபு. ஆனால் திருக்கோவில் கருவறையில், தனி பீடத்தில் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் மகாலட்சுமியின் தொன்மை வாய்ந்த கருங்கல் திருவுருவ சிலை உள்ளது. இத்திருக்கோவில் கருவறையை சுற்றிலும் மூன்று பிரகாரங்கள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் பல பரிவார தெய்வங்களை வழிபடுவதற்கான சன்னதிகள் அமைந்துள்ளன.