by Vignesh Perumal on | 2025-04-11 02:49 PM
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் விருப்பமனு தாக்கல் இன்று (ஏப்ரல் 11, 2025) தொடங்கியது. இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுவை பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நயினார் நாகேந்திரன் இன்று பிற்பகல் 2:40 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கமலாலய வாசற்படியை தொட்டு வணங்கி உள்ளே சென்றார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
ஒருவேளை வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம். முன்னதாக, அண்ணாமலை மீண்டும் தலைவராகக்கூடும் அல்லது நயினார் நாகேந்திரன் தலைவராகலாம் என்று பல்வேறு யூகங்கள் நிலவின.
ஆனால், பாஜகவின் புதிய விதிமுறைகளின்படி, 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்களே தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும் என்பதால், இருவருமே போட்டியிட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது சென்னையில் உள்ளார். அவர் தமிழக பாஜக தலைவர் தேர்தல் குறித்து முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.