by Vignesh Perumal on | 2025-04-11 09:01 AM
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று (11.04.2025) அதிகாலை நடந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி ஆவர். இவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூருக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து குறித்து வெளியான தகவலின்படி, 19 வயதுடைய கவியரசன் என்பவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றுள்ளார். விபத்தில் கவியரசனுக்கு இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டியது மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.