by Vignesh Perumal on | 2025-04-11 07:56 AM
குன்றத்தூரில் தேர்வு பயத்தால் 10-ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே குன்றத்தூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (15). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். திவ்யதர்ஷினியின் பெற்றோர் நேற்று (10.04.2025) காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த திவ்யதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி திவ்யதர்ஷினி பொதுத்தேர்வு மற்றும் மதிப்பெண்கள் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பயத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.