by Vignesh Perumal on | 2025-04-11 07:41 AM
அதிமுகவின் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநில இணைச்செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு வந்தேன். கடந்த 20 ஆண்டு காலம் அதிமுகவில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன், கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்திருக்கிறேன். அதிமுக கட்சி பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்ப்பின்றி பணியாற்றி இருக்கிறேன். மக்களுக்கான சேவை பணிகளிலும் மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பணிகள் அனைவரும் அறிந்ததே.
தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. எனவே கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்து கொள்கிறேன். கட்சியிலிருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் கனத்த இதயத்துடன் எடுத்திருக்கிறேன்.
கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பணிபுரிந்த கழகத்தின் நிர்வாகிகள், மூத்தவர்கள் மற்றும் கோவையில் எனது தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்."
சந்திரசேகர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், அவரது இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.