by Vignesh Perumal on | 2025-04-10 09:21 AM
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் வெற்றி பெற்றதன் 80-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மே 9-ம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் வெற்றி தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "மே 9-ம் தேதி நடைபெறவுள்ள வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அவர் இந்த ஆண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறோம். அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்து கூறுகையில், "வெற்றி தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்துள்ளது. எங்களது பங்கேற்பு குறித்து சரியான நேரத்தில் அறிவிப்போம்" என்றார்.
இந்த ஆண்டு நடைபெறும் வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்க பல நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். ஐந்து ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட முதல் ரஷ்யப் பயணம் இதுவாகும்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.