by Vignesh Perumal on | 2025-04-09 04:47 PM
கிப்ளி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது. பயனர்கள் தனிப்பட்ட பயோமெட்ரிக் தரவை Al செயலிகளிடம் வழங்குகிறார்கள். இந்த செயற்கை நுண்ணறிவு, முகங்கள் மற்றும் பின்னணிகளை பகுப்பாய்வு செய்து சேமித்து வைக்கிறது. அதாவது, கிப்ளி பயன்பாட்டைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைக் காலமாக, கிப்ளி கருப்பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் தயாரிப்புகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள், போலியான வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி, கிப்ளி தயாரிப்புகள் விற்பனை செய்வதாக நம்பவைத்து தனிநபர்களின் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களைத் திருடுகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "போலி வலைத்தளங்கள், அங்கீகரிக்கப்படாத மற்றும் நம்பகத்தன்மையற்ற வலைத்தளங்களில் கிப்ளி பொருட்களை வாங்க வேண்டாம். வலைத்தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், HTTPS மற்றும் பூட்டு சின்னம் போன்ற பாதுகாப்பு அம்சங்களை சரிபார்க்கவும். சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சியான சலுகைகள் மற்றும் போட்டிகளை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ கிப்ளி கணக்குகளை மட்டும் பின்தொடரவும்.
அதிகாரப்பூர்வமற்ற மின்னஞ்சல்களில் வரும் இணைப்புகள் மற்றும் கோப்புகளைத் திறக்க வேண்டாம். தனிப்பட்ட அல்லது நிதி தகவல்களைக் கேட்கும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம்.
அங்கீகரிக்கப்படாத sources-லிருந்து கிப்ளி தொடர்பான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். செயலிகளின் அனுமதிகளை கவனமாகப் படித்து, தேவையற்ற அனுமதிகளை வழங்க வேண்டாம்.
கிரெடிட் கார்டு எண், கடவுச்சொற்கள் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம்.
மேலும், ஏதேனும் சைபர் குற்றச் செயல்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக காவல்துறையை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சைபர் குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையின் மூலம், கிப்ளி பயன்பாட்டாளர்கள் மற்றும் வணிகங்கள் சைபர் குற்றவாளிகளின் வலையில் விழுவதைத் தவிர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது.