by Vignesh Perumal on | 2025-04-09 11:30 AM
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து மார்ச் 24-ந் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
சட்டப்பேரவைக்கு இரண்டாவது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள், அவை நடவடிக்கைகளில் தங்களை பேச அனுமதிக்காததை கண்டித்து இவ்வாறு செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தங்களை முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப அனுமதிப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்.
முன்னதாக, திங்களன்று இதே காரணத்திற்காக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், பதாகைகளை ஏந்திய சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்றைய தினம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியதை சுட்டிக்காட்டினார்.
அமலாக்க இயக்குநரகம் (ED) டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்களில் சோதனை நடத்தி ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் கண்டறிந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த வழக்கை தமிழகத்திற்கு வெளியே விசாரித்தால், ஊடக வெளிச்சம் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.