by Vignesh Perumal on | 2025-04-09 10:49 AM
புதுச்சேரி போக்குவரத்துக்கழக ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஏப்ரல் 9) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஊழியர்களின் முக்கிய கோரிக்கையில் கூறியிருப்பதாவது, "பணி நிரந்தரம்: நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம்: நிரந்தர ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்".
"ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தல்: ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" என்றும் அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.