by Vignesh Perumal on | 2025-04-08 03:52 PM
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பல்கலை., சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார். இது தொடர்பான சட்ட மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மாநில பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை கிடப்பில் வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. எனவே, மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய தேதிகளிலிருந்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினால், இதுவரை நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. அந்த பத்து மசோதாக்களில் பல்கலை துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களும் உள்ளன.
இதன் மூலம், இனி மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு, ஆளுநரே பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருந்து வந்தார். இந்த மாற்றத்திற்கு தமிழக அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.