by satheesh on | 2026-10-17 07:59 PM
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் அருகே உள்ள குளத்தில் தாமரை இலைகளையும், தாமரை மலர்களையும் பறித்ததற்காக, ஒரு முதியவரை மறைந்திருந்து கண்காணித்துக் கைது செய்து, அவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள் வனத்துறையினர்.
பாவம் அந்த முதியவர்! ஒரு தாமரை இலையின் விலை ஒரு ரூபாய்கூட இருக்காது. அந்த இலைகளையும் பூக்களையும் பறித்து, பூக்கடைக்காரரிடம் கொடுத்து ஒரு நாளைக்கு 50 ரூபாயோ, 100 ரூபாயோ சம்பாதித்து, அதில் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கும் ஏழை மனிதராகத்தான் இருப்பார். வயதான காலத்தில் வேறு என்ன வேலை அவரால் செய்ய முடியும்? குளத்தில் இறங்கி, தாமரை இலைகளையும் பூக்களையும் பறைத்து விற்று, கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பார். அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய முதியவரைப் பிடித்து, ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள். ஐயா, அவர் அந்தப் பணத்தை எப்படிக் கட்டுவார்? தாமரை இலை பறித்துப் பிழைப்பு நடத்தும் அந்த ஏழை மனிதர், ஒன்றரை லட்சம் ரூபாயை எங்கே போய்த் தேடுவார்? அபராதம் கட்டுவதற்காகக் கடன் வாங்க வேண்டுமா? அல்லது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் அடைக்க முடியாத கடன் சுமையை அவர் தலையில் ஏற்றப் போகிறீர்களா? அடடா! என்ன ஒரு சுறுசுறுப்பான அதிகாரி! மறைந்திருந்து கண்காணித்து, தாமரை இலை பறிக்கும் முதியவரைக் கையும் களவுமாகப் பிடித்து, ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் அளவுக்கு சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்துகிறீர்களே, பாராட்டுகள்! ஆனால், அனுமதியின்றி வனத்துறைக்குச் சொந்தமான கன்னியாகுமரி மாவட்ட மலைகளையே வெடி வைத்து உடைத்து, கனிம வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் பெரிய பெரிய திருடர்களைப் பார்த்தால், இதே அதிகாரிகள் எத்தனை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் போகிறார்கள்? அந்த மலைகளை வெடி வைத்துத் தகர்க்கும்போது இந்த அதிகாரிகளின் கண்களுக்கு அது தெரியவில்லையா? ஏழை முதியவர் தாமரை இலை பறிப்பது மட்டும் கண்ணுக்குத் தெரிகிறதா? மலைகளைத் தகர்த்து இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் மீது இதே வேகம் பாயுமா? சட்டம் என்பது ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கான ஆயுதமா? அல்லது இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களைத் தண்டிப்பதற்கான கருவியா? ஒரு பக்கம், வயதான காலத்தில் 50 ரூபாய், 100 ரூபாய் சம்பாதிக்கத் தாமரை இலை பறிக்கும் ஏழை முதியவர். இன்னொரு பக்கம், மலைகளையே வெடி வைத்துத் தகர்த்து வளங்களைக் கொண்டு செல்லும் பணபலம் மிக்கவர்கள். இந்த இருவரையும் ஒரே அளவுகோலில் பார்க்க வேண்டியதில்லை. சட்டத்தை மீறியிருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஏழையின் வாழ்வாதாரத்தையும் குற்றத்தின் தன்மையையும் கருத்தில் கொள்ளாமல் ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பது எந்த வகையில் நியாயம்? அந்த முதியவர் பறித்தது தாமரை இலைகளையும் பூக்களையும்தான்! ஆனால், அவர் மீது விழுந்திருப்பதோ ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் என்ற இடி! அதிகாரிகளே, அந்த முதியவரால் இந்த அபராதத்தை எப்படிக் கட்ட முடியும் என்று ஒருமுறை யோசித்துப் பாருங்கள். சட்டத்தை அமல்படுத்துவதில் காட்டும் அதே ஆர்வத்தை, இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் மீதும் காட்டுங்கள். ஏழை முதியவரின் கண்ணீருக்கு ஒரு விலையும், மலைகளை அழிப்பவர்களின் குற்றத்துக்கு வேறு விலையும் இருக்கக் கூடாது!, உங்களுடைய பார்வை ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும் இப்படி மேலும் கீழும் இருக்கக்கூடாது..
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பிழைப்பிற்கு குளத்தில் தாமரைப்பூ பறித்த முதியவர் ! கண்காணித்து 1.5 லட்சம் அபதாரம் விதித்து வனத்துறை அசத்தல் !!
மாணவனை விடுவிக்க லஞ்சம் ! S S I சஸ்பெண்ட் - எஸ் பி அதிரடி !
அப்பாவிடம் பணம் இருக்கிறது - அவர் பார்த்துக் கொள்வார் ! மூன்று பேரை பலி கொண்ட குற்றவாளியின் திமிர் பேச்சு !!
மேகமலை விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்.....!!! கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி தகவல்
போதைப் பொருள்கள் கடத்தல் - சொகுசு கார் பறிமுதல் ! இளம் பெண் உட்பட 4 பேர் அதிரடி கைது !!