by Vignesh Perumal on | 2026-06-09 01:24 PM
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே தோட்டத்தில் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கஞ்சாவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாகக் கணவன், மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் அவர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ரெட்டியார்சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பெருமளவில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு, கடத்தப்பட உள்ளதாக எஸ்பி அவர்களின் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், எஸ்பி-யின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ரெட்டியார்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாதாரண உடையில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் நடத்திய தொடர் கண்காணிப்பில், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில், ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் நடமாடுவது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, தனிப்படை போலீசார் அந்தத் தோட்டத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அங்கு மறைவான ஓரிடத்தில் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மற்றும் சந்தை மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தோட்டத்தில் கஞ்சா பதுக்கிய வழக்கில் தொடர்புடைய தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் கடத்தல் இடைத்தரகர் ஆகியோரை போலீசார் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்தனர். குறிப்பாக ஜெயபால் (45) (தோட்டத்தின் உரிமையாளர், அம்மாபட்டி), நந்தினி (37) (ஜெயபாலின் மனைவி), சையது காட்டுபாவா (37) (நத்தம், சமுத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்) ஆகியோர் கைதுசெய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாரணையில், சையது காட்டுபாவா என்பவர் ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை ரகசியமாகத் திண்டுக்கல்லுக்குக் கடத்தி வந்துள்ளார். அதனைப் பாதுகாப்பாகப் பதுக்கி வைத்துச் சில்லறை விற்பனை செய்வதற்காக, ஜெயபால்-நந்தினி தம்பதியினரின் தோட்டத்தை அவர்கள் பயன்படுத்தி வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 56 கிலோ கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட 3 பேரையும் எஸ்பி தனிப்படையினர் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து, இந்த நெட்வொர்க்கில் பின்னணியில் உள்ள வேறு முக்கியப் புள்ளிகள் யார், யாருக்கெல்லாம் இதில் தொடர்பிருக்கிறது என்பது குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மாவட்ட எஸ்பி பிரதீப் அவர்களின் இந்த அதிரடி நடவடிக்கை திண்டுக்கல் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !